பொடி லெசியை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

பொடி லெசியை 25 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 08-09-2020 | 4:15 PM
Colombo (News 1st) சிறை வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரான பொடி லெசி என்பவரை எதிர்வரும் 25 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு காலி நீதவான் நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது. பூசா சிறைச்சாலைக்கு சென்று பொடி லெசியிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு காலி பிரதம நீதவான் ஹர்சன கெக்குணவெல உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் சிலருக்கு பகிரங்கமாக உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கொஸ்கொட தாரக மற்றும் பொடி லெசி ஆகியோர் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் காலி நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் தங்களுக்கான வசதிகள் போதுமானதாக இல்லை என தெரிவித்து முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஆராய ஜூன் 26 ஆம் திகதி சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் சிலர் சென்றிருந்தனர். இதன்போது, ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பூசா சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கும் பகிரங்கமாக பொடி லெசி என்பவர் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக குறித்த அறிக்கையினூடாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் துப்பாக்கிகளை வைத்திருப்பதும் அரச உத்தியோகத்தர்களுக்கு பகிரங்கமாக உயிர் அச்சுறுத்தல் விடுப்பதும் பாரிய விடயம் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பலரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மன்றுக்கு அறிவித்துள்ளார். சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் போது, குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்ய சிறைச்சாலைக்குள் இருந்து இவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொடி லெசி என்ற சந்தேகநபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றுக்கு அறிவித்துள்ளார். இந்த விடயங்களை ஆராய்ந்த காலி பிரதம நீதவான் ஹர்சன கெக்குணவெல, எதிர்வரும் 25 ஆம் திகதி சந்தேகநபரை மன்றில் ஆஜராக்குமாறும் அன்றைய தினம் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.