தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பிற்கோ சஹரானுக்கோ ISIS உடன் நேரடி தொடர்பில்லை: ரவூப் ஹக்கீம்

by Staff Writer 08-09-2020 | 7:01 PM
Colombo (News 1st) தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பிற்கோ அல்லது அதன் தலைவர் சஹரான் ஹாசிமிற்கோ ISIS பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பிருக்கவில்லை என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சி வழங்கும் போதே ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் நாட்டின் நிலையை சீர்குலைக்கும் நோக்கில் செயற்பட்ட மறைமுக சக்தி ஒன்று காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ​(07) மாலை 6 மணியளவில் ஆஜரான ரவூப் ஹக்கீம் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ISIS பயங்கரவாதிகளின் பெயர் பயன்படுத்தப்பட்டமையின் ஊடாக தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட மறைமுக சக்தியின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். சஹரான் உள்ளிட்ட குழுவினர் இந்த மறைமுக சக்தியால், தவளைகளாகப் பயன்படுத்தப்பட்டு - பணத்திற்காக பெறப்பட்ட அடிப்படைவாத குழுவினர் எனவும் ஹக்கீம் சாட்சி வழங்கியுள்ளார். இது ஒரு தடவையில் மாத்திரம் நடத்தப்படவிருந்த தாக்குதல் எனவும், மீண்டும் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். குறித்த மறைமுக சக்தி யார் என இதன்போது அவரிடம் வினவப்பட்டது. ஊடகவியலாளர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்கள் யார் என்பது தொடர்பில் அறிவிக்க தயார் என ரவூப் ஹக்கீம் பதிலளித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினரூடாக அடிப்படைவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பில் முஸ்லிம் தலைவர்களை தௌிவுபடுத்த அப்போதைய அரச தலைவர்கள் கடமைப்பட்டிருந்ததாகவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான அரசியல் நெருக்கடி, ஒரு சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட வைராக்கியமாக வலுப்பெற்றதாகவும் ஹக்கீம் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டங்களுக்கு தாம் அழைக்கப்படவில்லை என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 52 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடியின் போது கூறியதாகவும் ரவூப் ஹக்கீம் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் ஒரு மோதல் நிலை காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பூஜித் ஜயசுந்தரவை பதவியிலிருந்து நீக்குமாறு அப்போதைய ஜனாதிபதி , பிரதமரிடம் கோரியிருந்தாரா என ஜனாதிபதி ஆணைக்குழு இதன்போது ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணை நடத்தி பூஜித் ஜயசுந்தரவை பதவியிலிருந்து நீக்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோரியிருந்ததாக ஹக்கீம் இதன்போது பதில் வழங்கியுள்ளார். இதேவேளை, இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படும், ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான சாராவை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார். ஐனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகி சாட்சி வழங்கிய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி இராஜேந்திரன் , நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டவரின் மனைவியாவார். சாரா இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படும் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவரின் வாக்குமூலத்தில் இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய புலனாய்வுப் பிரிவினரிடம் சாரா தகவல்களை வழங்கியுள்ளதாக சந்தேகிக்கக்கூடிய தரவுகள் காணப்படுவதாக, கடந்த ஜூலை 23 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் அளிக்கப்பட்ட சாட்சியூடாக தெரியவந்துள்ளது. இதேவேளை, அம்பாறை - சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி இராஜேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையை மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று கல்முனை நீதவான் I.N.ரிஸ்வானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதன்போது, சாரா எனப்படும் புலஸ்தினியின் தாயார் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இந்நிலையில், இன்று கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வு பிரிவிக்கு மீண்டும் அவரை அழைத்துச்சென்று மரபணு பரிசோதனைக்கான மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார். அதன்படி, சாராவின் தாயாரை கொழும்பிற்கு அழைத்து வந்து மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிமின் நெருங்கிய ஒருவர் இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கியுள்ளதாக, தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வௌிக்கொணரப்பட்டது. அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் ஆணைக்குழு முன்பாக சாட்சி வழங்கும் போதே இந்த விடயம் வௌியானது. தற்போது இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி அல்லது சாரா என்ற பெண் மூலமாகவே இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டிருக்கலாம் என அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஆணைக்குழுவில் தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்