இராமநாதபுரம் கடல் வழியாக இலங்கை வர முயன்றவர் இந்திய பொலிஸாரால் கைது

by Staff Writer 08-09-2020 | 9:12 PM
Colombo (News 1st) இந்தியாவின் - இராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு வர முயற்சித்த நபர் மற்றும் அவருக்கு உதவியோரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் - சின்ன ஏர்வாடி கடல் வழியாக இலங்கைக்கு தப்பி வர முயற்சித்தவரையும் அவருக்கு உதவியவர்களையும் நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நபரொருவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழகம் சென்றுள்ளார். அவரது விசா காலம் முடிவடைந்த நிலையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்துள்ளார். பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்தி மிதவைப் படகை தயார் செய்து அதன் மூலமாக இலங்கைக்கு தப்பி வர திட்டமிட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சுகவீனம் காரணமாக இலங்கைக்கு வர அவர் திட்டமிட்டு இருந்ததாகவும் அதற்காக திருநெல்வேலி மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சி மற்றும் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் இதற்கு உதவி செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா, அல்லது ஏதேனும் போதைப்பொருட்களை கடத்திச் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள் என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.