பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு...

இன்று முதல் வழமைக்கு திரும்பும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் 

by Staff Writer 08-09-2020 | 7:19 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் இன்று (08) முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பவுள்ளன. இதனடிப்படையில், காலை 7.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை வழமையான நேரத்தில் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து அரச பாடசாலைகளிலும் கடந்த 10 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனடிப்படையில் கடந்த 2 ஆம் திகதி முதல் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த காலங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதமையால் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஒக்டோபர் 10 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 08 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறைக் காலம் அறிவிக்கப்படுவதாக கல்வியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.