ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை 

ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட மூவரை மன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

by Staff Writer 07-09-2020 | 3:51 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே மற்றும் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் நீல் ரவீந்திர முணசிங்க ஆகிய மூவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சியினால் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜித்த சேனாரத்ன கடற்றொழில் அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் முகத்துவாரம் துறைமுகத்தை மிக குறைந்த தொகைக்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கி அரசுக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி மற்றும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தும் வகையில் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் இலஞ்சம் ஊழல் சட்டம் மற்றும் இலங்கை தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக குற்றஞ்மத்தப்பட்டுள்ளது.