குமாரசுவாமி கிருஷாந்தி உள்ளிட்டோரின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்

by Staff Writer 07-09-2020 | 9:49 PM
Colombo (News 1st) படுகொலை செய்யப்பட்ட குமாரசுவாமி கிருஷாந்தி உள்ளிட்டவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். செம்மணியில் இன்று (07) நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த செம்மணி பகுதியில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மிக கொடுரமாக கொல்லப்பட்டுள்ளார்கள். அதிலும் கிருஷாந்தி கொடுரமாக கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைகள் எல்லாம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்தப்பட்டு தமிழ் மக்களை பயமுறுத்தி தமிழ் மக்களை அவர்களுடைய உரிமை போராட்டத்தில் இருந்து பின்னடைய செய்து விடலாம் என்ற சிங்கள தரப்புகளின் எண்ணங்களுக்கு நாங்கள் நிச்சயமாக அடிபணியமாட்டோம்
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்தார்.
தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை போன்றவற்றை நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூர்வதன் ஊடாக தான் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். எல்லாவற்றிகக்கு மேலாக அரசியல் தீர்வு கிடைக்கப் பெற வேண்டும்
என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
இன்று வரை எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்காமல் இப்போது புதிய ஆட்சி அரங்கேறியுள்ளது. உயர்தர மாணவியின் படுகொலையை இன்றும் அவர் கல்வி கற்ற பாடசாலை கூட நினைவுகூற தயாராக இல்லாத நிலையில் இவ்வாறான சம்வம் தன்னுடைய பாடசாலை மாணவிக்கு நடந்தது என்பது கூட வரலாற்று ரீதியாக மறந்துவிட்ட துயரங்களை நாங்கள் பார்க்கின்றோம்
என ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் இதன்போது கூறினார்.