அத்தனகளு ஓயாவை அண்மித்த பகுதிகளில் வௌ்ள அபாயம் 

அத்தனகளு ஓயாவை அண்மித்த பகுதிகளில் வௌ்ள அபாயம் 

by Staff Writer 07-09-2020 | 5:49 PM
Colombo (News 1st) அத்தனகளு ஓயாவை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் இன்றிரவு (07)  வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மற்றும் ஜா-எல வீதி, கிரிந்திவிட்ட - கனேமுல்ல வீதியின் கிரிந்திவிட்டவை அண்மித்த பல பகுதிகள் நீரில் மூழ்கக்கூடும் என திணைக்களத்தின் நீர் விஞ்ஞான மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் சுகீஷ்வர சீனிபெல்லகே தெரிவித்துள்ளார். அத்தனகளு ஓயா பெருக்கெடுத்தமையால் திஹாரிய - கலோட்டுவாவ கிராமத்திலுள்ள 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. திஹாரி பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீடொன்றின் மீது நேற்றிரவு மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. இந்த கிராமத்தில் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த கடும் மழை மற்றும் காற்றினால் ஹட்டன் மென்டிஸ் வீதியிலுள்ள வீடொன்றின் மீது மதிலொன்றும் மண்மேடும் சரிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். இதேவேளை, ஹட்டன் - டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்தில் பலத்த காற்றினால் மின்சார கம்பிகளில் மரம் முறிந்து வீழ்ந்தமையால் தொழிலாளர் குடியிருப்புகள் சிலவற்றிற்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. நிலவும் கடும் காற்றினால் ஹசலக - மினிப்பே பகுதியில் 60 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றில் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக ஹசலக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். இதேவேளை, மொராயாய சங்கபோதி வித்தியாலயமும் சேதமடைந்துள்ளது. இந்த பாடசாலையின் 2 கட்டடங்கள் சேதமாகியுள்ளதுடன், இதனால் கனிஷ்ட பிரிவு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, வரக்காபொல பகுதியில் கந்தேகம பகுதியிலுள்ள வீடொன்றின் மீதும் மண்மேடு சரிந்து வீழந்துள்ளதால் குறித்த வீடு பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். எனினும் வீட்டிலிருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதேவேளை, குக்குலேகங்க வான்பாய்ந்தமையால் புலத்சிங்கள - மோல்காவ பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் குறித்த வீதியூடாக பயணிக்கும் கிராம மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கம்பஹா - வத்தளை பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் நேற்று மாலை சேலகபான பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. நிலவும் பலத்த காற்றினால் வெலிமடை மற்றும் ஊவா பரணகம பகுதிகளில் 77 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகளில் வசித்த 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முழுமையாக சேதமடைந்த வீடுகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமையாத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வெலிமடை மற்றும் ஊவாபரணகம ஆகிய பகுதிகளில் நேற்று மாலை மின்சார விநியோகமும் தடைபட்டிருந்தது. பலத்த காற்றினால் பலாங்கொடை எட்டவக்வளை பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையால் விகாரையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதேவேளை, தெரணியகல - உடபாக, கொள்பிங் தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியொன்றும் சேதமடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். மேலும் சில வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரணியகல - உடபாக, கொள்பிங் தோட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள மண்சரிவு அபாயம் தொடர்பில் கடந்த மே மாதம் 20 திகதியும் நியூஸ்பெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது. இதேவேளை, பலத்த மழை காரணமாக நீர்கொழும்பு கட்டுவ - புவகவத்தை பகுதியிலுள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. பால நிர்மானப் பணிகள் காரணமாக நீரோட்டம் தடைப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்