New Diamond மீட்பு பணிகளுக்காக விசேட நிபுணர் குழு

New Diamond கப்பலின் மீட்பு பணிகளுக்காக விசேட நிபுணர் குழு நாட்டை வந்தடைந்தது 

by Staff Writer 06-09-2020 | 3:32 PM
Colombo (News 1st) New Diamond கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்காக விசேட நிபுணர் குழு இன்று (06) காலை நாட்டை வந்தடைந்துள்ளது. பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6.50 மணியளவில் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததாக, விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். இவர்களில் மீட்பு பணிகளின் விசேட நிபுணர்களும் இடர்களை மதிப்பிடுபவர்களும் சட்ட ஆலோசகர்களும் அடங்குகின்றனர். குறித்த குழுவினர் கடற்படையினருடன் கல்முனையிலிருந்து, New Diamond கப்பல் உள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதேவேளை, தீயணைப்பதற்காக பயன்படுத்தப்படும் திரவம் மற்றும் நீர் விசிறப்பட்டு தீயணைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.  New Diamond கரையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில், ஆழமான கடற்பிராந்தியத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக நேற்றிரவு முதல் ஓஷன் (B)ப்லீஸ் என அழைக்கப்படும் டக் கப்பலும் பயன்படுத்தப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதனை தவிர, இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினருக்கு உரித்தான ட்ரோனியர் படகொன்று, மத்தளை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, New Diamond கப்பல் உள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதேவேளை,  New Diamond கப்பலின் நிர்வாகத்தினர் தமது உறவினர்களுடன் தொலைபேசியூடாக கலந்துரையாடுவதற்கு கடற்படையினரால் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த 20 கப்பல் ஊழியர்களும் கடற்படைக்கு சொந்தமான கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, New Diamond கப்பலின் வர்த்தக உரிமையாளரான கிறீஸ் - எதென்ஸ் நகரிலுள்ள நிறுவனத்தினால், மீட்பு பணிகளுக்காக சிங்கப்பூரின் சர்வதேச நிறுவனமொன்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தினூடாக, மீட்பு நடவடிக்கைகளுக்காக உபகரணங்களும், மசகு எண்ணெய் தொடர்பிலான விசேட நிபுணர்களும் அனுப்பபடவுள்ளனர்.