அவசர மின்சார கொள்வனவினால் நட்டம் ஏற்படுமா? 

அவசர மின்சார கொள்வனவினால் 2,100 கோடி ரூபா நட்டம் ஏற்படும் அபாயம்

by Staff Writer 06-09-2020 | 8:11 PM
Colombo (News 1st) அவசர மின்சாரக் கொள்வனவிற்கு 2,100 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் சில அமைப்புக்கள் இன்று (06) அறிவித்தன. 2,100 கோடி ரூபாவை செலுத்தி அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபை தயாராவதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. குறுகிய கால அடிப்படையில் ஹொங்கொங் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியங்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விலைமனுக்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்புகள் குறிப்பிடுகின்றன. ஒரு அலகு மின்சாரத்திற்காக சுமார் 31 ரூபாவை செலுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால அடிப்படையில், ஹொங்கொங் மற்றும் துபாய்க்கு சொந்தமான 2 நிறுவனங்களிடமிருந்து 128 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான முயற்சி உள்ளது. மின்சார மாஃபியாவுக்கு பின்னால் மின் பொறியியலாளர்கள் உள்ளனர். மின்சக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளனர். சில தூதுவர்கள் உள்ளனர். மின்சக்தி அமைச்சர் கூறும் வகைியல் இந்த மாஃபியாவிற்கு உதவும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தற்போதைய இந்த கொள்வவு காரணமாக நாட்டிற்கு 2,100 கோடி ரூபா நட்டம் ஏற்படுகிறது. எந்த அரசாங்கம் வந்தாலும் மின்சார மாஃபியா இடம்பெறுவதை காண முடிகிறது. மின்சார அதிகாரி அறியாமல் தவறவிட்டதாக கூறினாலும் தற்போது திட்டமிட்டு அதனை செய்தமை தௌிவாகின்றது. நுகர்வோரை பாதுகாக்கும் உரிமை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு உள்ளது. அதற்கான அதிகாரம் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கான அனுமதியை வழங்க வேண்டாம். மின்சார சபைக்கு 2,100 ரூபா நட்டத்தை ஏற்படுத்தும் மின்சார மாஃபியாவை நிறுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுங்கள்
என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் வித்தானகே கூறினார். இதேவேளை, மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு இன்று கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய தனியார் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, மின்சார தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மின்சாரத்தை விநியோகிக்கின்ற வர்த்தகர்கள் உள்ளனர். அது மாத்திரமல்ல இந்த நடவடிக்கையை வழிநடத்துகின்ற மின்சார சபை அதிகாரிகள் யார். மின் பொறியியலாளர்கள் அங்கம் வகிக்கும் நிருவாக சபையினராலேயே இந்த நடவடிக்கை வழிநடத்தப்படுகிறது. ஆகவே அமைச்சர் அவர்களே இந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாதீர்கள்
என மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அநுருத்த சோமதுங்க தெரிவித்தார்.