Sputnik V நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக ஆய்வில் தகவல்

by Bella Dalima 05-09-2020 | 5:02 PM
Colombo (News 1st) ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ரஷ்யா, உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்தது. இந்த தடுப்பூசி பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தயாராகி, பதிவு செய்யப்பட்டது. இந்த தடுப்பூசிக்கு

Sputnik V

 என்று பெயரிடப்பட்டுள்ளது. முதலில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தடுப்பூசியை போட ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யா கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 பாதுகாப்பானது என்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதும் ஆய்வின் முடிவில் தெரியவந்திருப்பதாக மருத்துவ இதழான 'தி லான்செட்' தெரிவித்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 76 பேருக்கும் COVID-19 வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தியானது கொரோனாவில் இருந்து இயற்கையாகவே மீண்ட பிறகு மக்கள் கொண்டிருந்த நோயெதிர்ப்பு சக்தியை ஒத்திருந்தது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.