by Staff Writer 05-09-2020 | 5:31 PM
Colombo (News 1st) நாளை (10) கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் 100mm-க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டை ஊடறுத்து மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று மாலை வேளையில் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், மத்திய, தென், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்வதுடன் ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமும் அதிகரிக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.