கண்டி நில அதிர்விற்கு மனித செயற்பாடுகள் காரணமில்லை

கண்டி நில அதிர்விற்கு மனித செயற்பாடுகள் காரணமில்லை: புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிப்பு

by Staff Writer 05-09-2020 | 3:27 PM
Colombo (News 1st) கண்டி - ஹாரகம, அநுரகம உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்விற்கு மனித செயற்பாடுகள் நேரடிக் காரணியாக அமையவில்லை என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 29 ஆம் திகதி நில அதிர்வு ஏற்படுவதற்கு முன்னரே சில நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அண்மையில் தெரியவந்தது. விக்டோரியா நீர்த்தேக்கத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கருவியில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், குறித்த பகுதியில் பாரியளவில் முன்னெடுக்கப்படும் சுண்ணாம்புக்கல் அகழ்வு காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதென பிரதேசமக்களும் சூழலியலாளர்களும் கூறினர். இது தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது, அதன் பணிப்பாளர் நலின் டி சில்வா பதிலளித்தார். இது இயற்கையாக ஏற்பட்ட ஒன்றே தவிர மனித செயற்பாடுகளால் நேரடியாக ஏற்பட்ட தாக்கம் என்று கருத முடியாது என அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் புவியியல் ரீதியாகப் பார்த்தால் இந்த வலயம் மிகவும் பலவீனமானது. வளைவுகளைக் கொண்ட ஒரு பகுதி. இந்தப் பகுதியில் 1993 முதல் 2006 வரை சிறு நில அதிர்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பகுதி சற்று நடுக்கமுள்ள வலயமாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது. சுண்ணாம்புக்கல் தட்டையின் மேலுள்ள பகுதி தளர்வடையும் சந்தர்ப்பங்கள் இருப்பதே அதற்கு காரணம். விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்கின்றமை சற்று அழுத்தமாக இருக்கலாம். எனினும், நீர்த்தேக்கம் பாதிக்கப்படுவதற்கான அபாயம் இல்லை
என நலின் டி சில்வா குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்