மக்கள் சக்தி குழுவினரின் 8 ஆம் நாள் பயணம்

மக்கள் சக்தி குழுவினரின் 8 ஆம் நாள் பயணம்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2020 | 9:45 pm

Colombo (News 1st) நிவர்த்திக்கப்படாத மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்கும் ‘மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்’ செயற்றிட்டம் 8 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 05 ஆம் கட்டம், நாட்டின் 25 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

8 ஆம் நாளான இன்று கிளிநொச்சி, பொலன்னறுவை, இரத்தினபுரி பகுதிகளுக்கு மக்கள் சக்தி குழாத்தினர் விஜயம் செய்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர்.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழாத்தினரின் ஒரு பகுதியினர் யூனியன் குளம் குடியிருப்பு கிராமத்திற்கு சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டனர்.

தொடர்ந்து பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரந்தை, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்றுப்புலம், கோணவில் பகுதிகளுக்கும் மக்கள் சக்தி குழாத்தினர் விஜயம் செய்தனர்.

சுத்தமான குடிநீர் இன்மை, வீதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாம் எதிர்நோக்குவதாக இதன்போது மக்கள் கவலை வௌியிட்டனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் கிராமத்திற்கு சென்ற மற்றைய மக்கள் சக்தி குழாத்தினர் 9 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட வீடுகளின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு ஜன்னல்களின் நிலைகள் தகர்ந்துள்ளமையைக் கண்ணுற்றனர்.

வீதி கட்டமைப்பு இன்றியும் தொழில் வாய்ப்புகள் இன்றியும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமலும் இந்த மக்கள் அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

நூற்றாண்டு வரலாற்றை அண்மித்த சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் சிலரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் சக்தி குழாத்தினரிடம் பாடசாலை சமூகத்தினர் முறையிட்டனர்.

மக்களின் பிரச்சினைகளை அறிக்கையிடும் நோக்கில், சோறன்பற்று கிராமத்தில் மக்கள் சக்தி மக்கள் அரண் ஸ்தாபிக்கப்பட்டது.

கிளிநொச்சி – ஆரத்தி நகர் பகுதிக்கு சென்ற மக்கள் சக்தி குழாத்தினரிடம் தமது பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை நீர் விநியோகிக்கப்படுவதாக மக்கள் முறையிட்டனர்.

சேறு கலந்த நீரையே இப்பகுதி மக்கள் பருகி வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்