இல்மனைட் அகழ்வை அனுமதிக்கக்கூடாது: திருக்கோவிலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இல்மனைட் அகழ்வை அனுமதிக்கக்கூடாது: திருக்கோவிலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2020 | 9:38 pm

Colombo (News 1st) அம்பாறை – திருக்கோவில், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இல்மனைட் அகழ்விற்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருக்கோவில், தாண்டியடியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பாரிய கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

தாண்டியடி பிரதான வீதியில் ஆரம்பமான இந்தப் பேரணி திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை பயணித்தது.

2018 ஆம் ஆண்டு திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்விற்கான பணிகள் வெளிநாட்டு நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட போது, மக்களின் எதிர்ப்பினால் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

மீண்டும் கடந்த வாரம் திருக்கோவில் தாண்டியடி கடற்கரையில் அரச துறைசார் அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்ட நிலையில், இல்மனைட் அகழ்விற்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பேரணியாக சென்ற மக்கள் திருக்கோவில் பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கை மகஜரை கையளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் , பொத்துவில் பிரதேசசபை உப தவிசாளர் உள்ளிட்ட சிவில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்