MT New Diamond கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் பேரழிவாக அமையும் என எச்சரிக்கை

MT New Diamond கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் பேரழிவாக அமையும் என எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

04 Sep, 2020 | 9:04 pm

Colombo (News 1st) தீ பரவியுள்ள MT New Diamond கப்பலில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், நாட்டின் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள அபாய நிலை இதுவரை நீங்கவில்லை.

இன்று மாலை 5 மணியளவில் விமானப் படையினரால் பதிவு செய்யப்பட்ட காணொளி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, MT New Diamond கப்பலில் எரிபொருள் கசிவு ஏற்பட்டால், அது உலகின் சூழல் பேரழிவாக அமையக்கூடும் என கடல் மாசுறுதல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலின் நிலைமை மற்றும் இந்நாட்டு கடற்பரப்பிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பாக விளக்கமளிப்பதற்காக பாதுகாப்பு பிரிவு தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கியஸ்தர்களின் பங்களிப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று பிற்பகல் நடைபெற்றது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று 38 கடல் மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தாலும், கப்பலின் இயந்திரம் செயலிழந்துள்ளதால், கப்பல் மிதந்தவாறு இலங்கை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. தற்போது 22 கடல் மைல் தொலைவில் கப்பல் உள்ளதென இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

கப்பல் மிக மெதுவாக தெற்கு நோக்கி மிதந்து செல்வதாகவும் கப்பல் 60 அடி ஆழத்தில் உள்ளதாகவும் கப்பலில் இருந்த 23 பேரில் தற்போது 19 பேர் கடற்படையினருடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ரியர் அட்மிரல் நந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.

இதேவேளை, பலத்த எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

கப்பலில் தீ பரவிய விதம் தொடர்பில் இலங்கை கடற்படையின் ரியர் அட்மிரல் நந்தன ஜயரத்ன பின்வருமாறு விளக்கமளித்தார்.

 ப்பலின் இயந்திர அறையில் தீ ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தீ கப்பலின் சிறப்புப் பகுதிக்கு பரவியுள்ளது. அங்கு அறைகள் மற்றும் ஏனைய சில பகுதிகள் இருக்கின்றன. ஆனால், கப்பலில் மசகு எண்ணெய் வைக்கப்பட்டுள்ள பகுதி மிகவும் பாதுகாப்பானது. கப்பலுக்கு ஜப்பானின் நற்சான்றுப்பத்திரம் உள்ளது. 20 வருடங்கள் பழைமையானதாக இருந்தாலும் அந்தக் கப்பலில் மற்றுமொரு பாதுகாப்பு அரண் உள்ளது. இரண்டு அரண்களுக்கு இடையில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த தீயினால் மசகு எண்ணெய்க்கு தீ பரவக்கூடிய வாய்ப்பு மிகவும் குறைவு. அதனை உறுதிப்படுத்துவதற்காகவே படகுகளைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக கடல் நீரைப் பயன்படுத்தி அந்தப் பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.

என அவர் தௌிவுபடுத்தினார்.

இதேவேளை, நாட்டின் கடல் எல்லைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர விளக்கமளித்தார்.

நமது கடல் எல்லைக்கு அப்பால் கப்பலைத் தள்ளிச்செல்ல முடியுமாக இருந்தால், அதனை செய்வதே எமது முதலாவது முயற்சி. கப்பலில் இருக்கும் 2,000,72 தொன் மசகு எண்ணெய் கடலில் கலப்பதுதான் இரண்டாவதாக நாம் அடையாளம் கண்டுள்ள பாரதூரமான நிலைமை. அப்படி நடந்தால் அது நமது கடற்பரப்பில் மாத்திரமல்ல முழு உலகத்தையும் பாதிக்கச் செய்யும். அதனை எதிர்கொள்வதற்கு நாடென்ற ரீதியில் எமக்கு இருக்கும் வளங்களும் சக்தியும் குறைவானது. எனவே, எமக்கு இருக்கும் வளங்களின் மூலம் கடல்வாழ் உயிரிழனங்களை எம்மால் பாதுகாக்க முடியாது. அந்த கடல்வாழ் உயிரினங்கள் பாரதூரமான நிலையை எதிர்கொண்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்கள் சுவாசிப்பதற்காக மேல் நோக்கி வரும்போது மசகு எண்ணெய்யை அவை உட்கொள்ளும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்

இதேவேளை, எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால் அதனை நிர்வகிக்கும் இயலுமை இருப்பதாக ரியர் அட்மிரல் நந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.

கப்பலில் இருந்து கசியும் எண்ணெய்யை அவ்விடத்திலேயே நிறுத்தி, பரவிச் செல்லாமல் தடுக்கும் கருவி இலங்கையில் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால், அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்