20 ஆவது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரங்கள் பறிபோகும் என்கிறார் அனுரகுமார  

20 ஆவது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரங்கள் பறிபோகும் என்கிறார் அனுரகுமார  

எழுத்தாளர் Bella Dalima

04 Sep, 2020 | 9:33 pm

Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டது.

20 ஆவது திருத்தத்தின் ஊடாக இந்த அரசாங்கம் நாகரிகத்திலிருந்து அநாகரிகத்திற்குள் பயணிக்கவே முயல்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

சட்டத்தை இயற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. பாராளுமன்ற செயற்பாடுகளில் அநாகரிமாக தலையீடு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கவில்லை. பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நான்கரை வருடங்கள் என்றே கடந்த காலத்திலும் தற்போதும் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் உள்ளது. ஆனால், பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு ஓராண்டின் பின்னர் அதனை நீடிப்பதா, இல்லையா என்ற தீர்மானத்தை ஜனாதிபதியே எடுப்பாரென 20 ஆவது திருத்தத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதென அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும், உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் தொடக்கம் மேல் நீதிமன்ற நீதியரசர்கள் வரை அனைவரையும் நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவையிடம் இருந்தது. தற்போது அந்த சகலரையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. இதனூடாக முழு நீதிமன்ற அதிகாரமும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் திட்டம் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அமைச்சரையும் நீக்கும் அதிகாரமும், அமைச்சர்களை தன் இஷ்டப்படி நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதி வசமாகின்றது. இதனால், ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த பழங்குடி யுகத்தில் தலைவர்களுக்கு இருந்த அதிகாரங்கள் 20 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளார் என அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

19 ஆவது திருத்தத்தில் சிற்சில குறைபாடுகள் இருந்தன. அதன் ஆணைக்குழுக்கள் மக்கள் எதிர்பார்க்கும் சுயாதீனத் தன்மையைப் பாதுகாக்கத் தவறியிருந்தன. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, அரசாங்கத்தை சமூக நலன் கருதியதாகக் கொண்டு செல்வதானால், அந்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருந்தால், அதனை திருத்தும் செயற்பாடுகளே இந்தத் திருத்தத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள் முற்றுமுழுதாக சுயாதீனத் தன்மையை இழந்துள்ளன. ஜனாதிபதியின் உத்தரவுகளுக்கு கீழ்படிந்தவை அவை. தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் கொள்கை வகுப்பு ஆணைக்குழு என முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு ஆணைக்குழுக்கள் இருந்தன. அவற்றை முழுவதுமாக நீக்கி, கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

என அனுரகுமார கூறினார்.

பிரதமரின் அதிகாரத்தையும் 20 ஆவது திருத்தத்தின் மூலம் இழக்கச் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஸ எவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என்று எனக்கு தெரியாது. பிரேமதாச கூறியதைப் போல் அதிகாரமற்ற நிலைமையே பிரதமருக்கு ஏற்பட்டுள்ளது. தலைக்கு மேல் வாளொன்றை உயர்த்திக்கொண்டு இருக்கும் வகையிலான அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது

என அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்