மக்கள் சக்தி குழுவினர் புதுக்குடியிருப்பிற்கு விஜயம்

by Staff Writer 04-09-2020 | 10:06 PM
Colombo (News 1st) நிவர்த்திக்கப்படாத மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்கும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் 7 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பங்குபற்றுதலுடன், முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 05 ஆம் கட்டம், நாட்டின் 25 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 7 ஆம் நாளான இன்று முல்லைத்தீவு, பொலன்னறுவை, இரத்தினபுரி பகுதிகளுக்கு மக்கள் சக்தி குழாத்தினர் இன்று விஜயம் செய்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த மக்கள் சக்தி குழாத்தினர், புதுக்குடியிருப்பு பிரதேச பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். தேராவில், வள்ளுவர்புரம், தொட்டியடி பகுதிகளுக்கு விஜயம் செய்த நியூஸ்ஃபெஸ்ட் குழாத்தினருக்கு மக்கள் வரவேற்பளித்தனர். காட்டு யானைகளின் தொல்லை, குடிநீர்ப் பிரச்சினை, வீடமைப்புத் திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது மக்கள் சக்தி குழாத்தினர் கேட்டறிந்து கொண்டனர். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த மற்றுமொரு மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் இருட்டுமடு கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தனர். குடிநீரின்றி இம்மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். வீட்டு வசதிகள், பாடசாலை வசதிகள் இன்றி தாம் வாழ்வதாக மக்கள் சக்தி குழாத்தினருக்கு இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இருட்டுமடு கிராமத்தில் மக்கள் சக்தி மக்கள் அரண் ஸ்தாபிக்கப்பட்டது. மக்கள் அரணுக்கு வருகை தந்திருந்த மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்தனர். கசிப்பு, போதைப்பொருள் பாவனை என்பன தமது இளைஞர்களை பாதிக்கும் பிரதான காரணியாக உள்ளதென மக்கள் அரண் கலந்துரையாடலின் போது மக்கள் தெரிவித்தனர்.