ரணிலிடம் ஜனாதிபதி ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு 

ரணிலிடம் ஜனாதிபதி ஆணைக்குழு 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு 

by Staff Writer 04-09-2020 | 3:46 PM
  Colombo (News 1st) 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர், அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வௌியேறியுள்ளார். முற்பகல் 10 மணியளவில் ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் மாலை 3 மணியளவில் அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான டொக்டர் நிஹால் ஜயதிலக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கமைய, ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தலுக்கு அமைய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். திவிநெகும, திணைக்களமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், தாமாகவே பணியிலிருந்து விலகிய தொழிலாளர்களுக்கு இழப்பீடு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளையும் வீட்டுத்திட்டத்தின் கீழ் நிவாரணங்களையும் வழங்கியதாகத் தெரிவித்து தம்மைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்தமையானது, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையெனத் தெரிவித்து வைத்தியர் நிஹால் ஜயதிலக்க ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தார். இந்த முறைப்பாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, இரா.சம்பந்தன், மலிக் சமரவிக்ரம, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.