தீ பரவியுள்ள MT New Diamond கப்பலின் பணியாளர் ஒருவர் உயிரிழப்பு

தீ பரவியுள்ள MT New Diamond கப்பலின் பணியாளர் ஒருவர் உயிரிழப்பு

தீ பரவியுள்ள MT New Diamond கப்பலின் பணியாளர் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2020 | 3:21 pm

Colombo (News 1st) தீ பரவியுள்ள MT New Diamond கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விமானப்படை மற்றும் கடற்படையினருடன் இனைந்து கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டேர்னி பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

தீ பரவிய கப்பலில் இன்று அதிகாலை இரண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக கப்பலின் சமநிலை மாறி வருவதாகவும் கலாநிதி டேர்னி பிரதீப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, MT New Diamond கப்பலின் கொதிகலன் அறையிலிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பலின் அலுவலக உத்தியோகத்தர்களின் வாக்குமூலத்திற்கமைய இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.

கப்பலில் பணியாற்றிய 22 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் சிகிச்சைகளுக்காக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனையோர், கப்பலில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினருடன் இணைந்து செயற்படுவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் பயணித்த சுபர் டேங்கர் ரகத்தை சேர்ந்த கப்பலில் நேற்று (03) முற்பகல் தீ பரவியது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 08 கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.

இலங்கை கடற்படையின் 03 கப்பல்களும் இந்திய கடற்படையின் 02 கப்பல்களும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த ரஷ்ய யுத்த கப்பல்கள் இரண்டும் விபத்திற்குள்ளான கப்பலுக்கு சொந்தமான மற்றுமொரு கப்பலும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீ கட்டுப்படுத்தப்படும் பட்சத்தில் பாரிய சூழல் பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, விமானப்படையினரும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜயசிங்க குறிப்பிட்டார்.

திருகோணமலை – சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து பீச் கிராப்ட் (Beach Craft) ரகத்தைச் சேர்ந்த விமானமொன்று கண்காணிப்பு நடவடிக்கைக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

MT New Diamond கப்பலில் பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்த விமானம் ஊடாகவும் நீர் விசிறப்படுவதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜயசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, தீ பரவியுள்ள கப்பல் காணப்படும் கடல் பிராந்தியத்திற்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்