தனிமைப்படுத்தலுக்காக வழங்கப்பட்ட காணியில் இராணுவ முகாம்: உரிமையாளர் வழக்குத் தாக்கல்

தனிமைப்படுத்தலுக்காக வழங்கப்பட்ட காணியில் இராணுவ முகாம்: உரிமையாளர் வழக்குத் தாக்கல்

தனிமைப்படுத்தலுக்காக வழங்கப்பட்ட காணியில் இராணுவ முகாம்: உரிமையாளர் வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2020 | 6:41 pm

Colombo (News 1st) ஹட்டன் – கொட்டகல, கொமர்ஷல் பகுதியில் அத்துமீறி காணி கையகப்படுத்தப்பட்டமை தொடர்பில் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

50 கோடி ரூபா நட்ட ஈடு கோரி இன்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.

இந்த வழக்கு ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோ , 02 கேர்ணல்கள், மேஜர் ஒருவர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணைக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு நீதவான் அறிவித்தல் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, இந்த காணி அபகரிப்பு தொடர்பில் நேற்றும் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக பிறிதொரு வழக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்பான விசாரணைக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த காணியில் காணப்பட்ட சில கட்டடங்களையும் ஆக்கிரமித்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் அந்த பகுதியை இராணுவ முகாமாக மாற்றியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு எவ்வித அனுமதியையும் காணி உரிமையாளரிடம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் அனுமதியின் பிரகாரம், 50 வருட குத்தகைக்கு பெற்ற குறித்த காணியை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மீளக் கையளிக்க வேண்டும் என ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட இந்த காணியில் தொழிற்சாலை இயந்திரங்களைத் திருத்தும் பணிகளுக்கான நிலையம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்