20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளவையும் நீக்கப்பட்டுள்ளவையும்

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளவையும் நீக்கப்பட்டுள்ளவையும்

எழுத்தாளர் Bella Dalima

03 Sep, 2020 | 6:28 pm

Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு குறைநிரப்பு வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபில், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை 20ஆவது திருத்தத்தில் பாராளுமன்ற சபையாக மாற்றப்பட்டுள்ளது.

அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படும் பிரதிநிதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னைய அரசியலமைப்பு திருத்தத்தில் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மூவர் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது சிவில் பிரதிநிதிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தன. 20 ஆவது திருத்தத்தில் அது தொடர்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற விடயம் 20 ஆவது திருத்தத்தில் மாற்றப்பட்டு, ஜனாதிபதியும் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் சிபாரிசின் அடிப்படையில் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் மாற்றப்பட்டு, ஜனாதிபதியாலும் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் திருத்தப்பட்டு,  அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் செல்ல முடியும் எனும் விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வயதெல்லை 35-இலிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவும், கொள்கை வகுப்பு ஆணைக்குழுவும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசியலமைப்பிற்கு அமைய பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட நான்கரை வருடங்களின் பின்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகிறது.

எனினும், 20 ஆவது அரசியலமைப்பு திருதத்திற்கு அமைய, பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.

இதேவேளை, பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதாக 20 ஆவது அரசியலமைப்பு திருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் 30 பேர் என்ற வரையறை 20 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்