ஷானி அபேசேகரவிற்கு மீண்டும் விளக்கமறியல்

ஷானி அபேசேகரவிற்கு 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்

by Staff Writer 03-09-2020 | 3:43 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு பொய் சாட்சியம் உருவாக்கி, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டமை குறித்து இவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வாவை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளித்துள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரிடம் சிவப்பு பிடியாணையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வழக்கை வழிநடத்தும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் 04 ஆவது சந்தேகநபராக முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் நவரத்ன பிரேமதிலக்க என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இவருக்கு வௌிநாட்டு பயணத்தடையை விதித்துள்ள நீதிமன்றம், இந்த தடை உத்தரவு தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு அறியப்படுத்துமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.