மஞ்சள், மிளகிற்கு நிர்ணய விலை விதிக்கப்பட வேண்டும்

மஞ்சள், மிளகிற்கு நிர்ணய விலை விதிக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி தெரிவிப்பு 

by Staff Writer 03-09-2020 | 5:13 PM
Colombo (News 1st) மஞ்சள் மற்றும் மிளகிற்கு நிர்ணய விலை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து சர்வதேச சந்தைவாய்ப்புகளைப் பெற்று மஞ்சள் மற்றும் மிளகு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சிறு தோட்ட பயிர்செய்கைக்கான அபிவிருத்தியுடன் தொடர்புடைய கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கலந்தாலோசிக்கப்பட்டது. இதன்போது கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கருவா, ஏலம், கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்டப் பயிர்செய்கைகளின் விருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றின் தேவைகளை உள்ளூர் உற்பத்திகளூடாகப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், எஞ்சியவற்றை சேகரித்து ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிடுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 100 கிராமங்களில் மஞ்சள் மற்றும் இஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிளகாய் நுகர்விற்கு பதிலாக மிளகை பயன்படுத்துவது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தௌிவுபடுத்தியுள்ளார். இலங்கை வெற்றிலையை கொள்வனவு செய்யும் பிரதான நாடாக பாகிஸ்தான் காணப்படுவதுடன் , கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வெற்றிலை ஏற்றுமதியை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விமான சேவை நிறுவனங்களுடன் கலந்துரையாடி தீர்வு காணுமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.