நாட்டின் கடற்பரப்பில் மிதக்கும் கனதியான கடற்பாசி

நாட்டின் கடற்பரப்பில் மிதக்கும் கனதியான கடற்பாசி: நாரா ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது

by Staff Writer 03-09-2020 | 4:09 PM
Colombo (News 1st) பச்சை நிறமுடைய கனதியான ஒருவகை கடற்பாசி கடலில் மிதப்பதாக மீனவர்களால் கடற்றொழில் திணைக்களத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 31 ஆம் திகதி அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர்களே இது குறித்து அறிவித்துள்ளனர். குறித்த கடற்பிராந்தியத்தில் பிடிக்கப்பட்ட மீன்களும் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் நாரா (NARA) நிறுவனம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. நெஃப்கியூலா என அழைக்கப்படும் டயட்டம எனும் ஒருவகை கடற்பாசியே இவ்வாறு கடல் மேற்பரப்பில் படர்ந்துள்ளதாக நாரா நிறுவனத்தின் சூழல் பிரிவின் பொறுப்பாளரும் நிபுணருமான ஷாமலி வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த கடற்பாசியின் மூலம் நச்சுப்பொருள் வௌியேற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் தெரியவரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமை நாட்டின் ஏனைய கடற்பிராந்தியங்களிலும் காணப்படுகின்றன. காலி, களுத்துறை, பயாகல, பேருவளை, சிலாபம் மற்றும் முகத்துவாரம் ஆகிய பகுதிகளிலும் இவ்வாறான கடற்பாசி வகை உருவாகியுள்ளதாகவும் நாரா நிறுவனத்தின் சூழல் பிரிவின் பொறுப்பாளரும் நிபுணருமான ஷாமலி வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, குப்பைகள் கடலில் வீசப்படுவதை தடுக்கும் வகையில், நாரா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.