விபத்திற்குள்ளான கப்பலிலிருந்து இருவர் மீட்பு

சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் விபத்திற்குள்ளான கப்பலின் கெப்டனும் மற்றுமொரு ஊழியரும் மீட்பு 

by Staff Writer 03-09-2020 | 5:52 PM
Colombo (News 1st) அம்பாறை - சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் விபத்திற்குள்ளான எரிபொருள் தாங்கி கப்பலின் கெப்டனும் மற்றுமொரு அலுவலக ஊழியரும் இலங்கை கடற்படையினரால் இன்று மாலை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கரைக்கு அழைத்துவரப்படுவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார். விபத்திற்குள்ளான படகிலிருந்தவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நாட்டிற்கு வருகை தந்திருந்த ரஷ்ய யுத்த கப்பல்கள் இரண்டும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இலங்கைக்காக ரஷ்ய தூதரகம் வழங்கிய அனுமதிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த இரண்டு யுத்த கப்பல்களும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இன்று நாட்டிலிருந்து திரும்பிச்செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. சங்கமன்கண்டி கிழக்கு பகுதியிலிருந்து 38 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பிராந்தியத்தில் MT New Diamond என்ற எண்ணெய் கப்பல் இன்று விபத்திற்குள்ளானது. இந்த கப்பலின் மீட்பு பணிகளுக்காக இரண்டு கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. MT New Diamond எனும் குறித்த எண்ணெய் கப்பலிலுள்ள கெப்டன் மற்றும் மேலுமொரு அலுவலரை தவிர, ஏனைய கப்பல் ஊழியர்கள் மற்றுமொரு கப்பலுக்கு மாற்றப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த கப்பலில் முன்னெடுக்கப்பட்ட மீட்பு பணிகளைத் தொடர்ந்து, கப்பலின் கெப்டனும் மற்றுமொரு ஊழியரும் மீட்கப்பட்டனர். இதேவேளை, விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு விமான படையின் Beach Craft ரக விமானம் அனுப்பி வைக்கப்பட்டதாக விமானப் படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் துஷாந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.