விபத்திற்குள்ளான எரிபொருள் கப்பலில் தீ பரவல்: இலங்கைக்கு உதவ 3 கப்பல்களை அனுப்பியுள்ளது இந்தியா

விபத்திற்குள்ளான எரிபொருள் கப்பலில் தீ பரவல்: இலங்கைக்கு உதவ 3 கப்பல்களை அனுப்பியுள்ளது இந்தியா

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2020 | 9:13 pm

Colombo (News 1st) அம்பாறை – சங்கமன்கண்டியை அண்மித்துள்ள கடற்பகுதியில் விபத்திற்குள்ளான எரிபொருள் கப்பலில் தீ பரவி வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ரஷ்ய யுத்த கப்பல்கள் இரண்டும் தீயை அணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன.

குவைத்திலிருந்து இந்தியா நோக்கிப் பயணித்த கப்பலில் இன்று முற்பகல் தீ பரவியுள்ளது.

தீ பரவியபோது குறித்த கப்பல் 37 கடல் மைல் தொலைவில் பயணித்துள்ளது.

பனாமா நாட்டின் தேசியக் கொடியுடன் மசகு எண்ணெய், டீசலுடன் குறித்த கப்பல் பயணித்துள்ளது.

MT New Diamond எனும் கப்பலின் சமையலறையில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதுடன், இது தொடர்பில் இன்று காலை 8.05 மணியளவில் இலங்கை கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்ததும் கடற்படையின் சயுர மற்றும் ரணசிறி கப்பல்கள் குறித்த பகுதியை சென்றடைந்துள்ளன.

தீ பரவிய சந்தர்ப்பத்தில் கப்பலில் ஊழியர்கள் 23 பேர் இருந்துள்ளதுடன், அவர்களில் பெருமளவிலானோர் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்களாவர்.

குறித்த வர்த்தகக் கப்பலில் பயணித்த 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த பொறியியலாளர் இன்று மாலை மீட்கப்பட்டு, கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கப்பலின் கெப்டன் மற்றும் ஊழியர் ஒருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு கடற்படையினரின் கப்பலில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கிரேக்கத்தைச் சேர்ந்தவரே குறித்த கப்பலின் கெப்டனாக பொறுப்பு வகிக்கின்றார்.

கப்பல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கென விமானப்படைக்குச் சொந்தமாக Beechcraft ரகத்தைச் சேர்ந்த கண்காணிப்பு விமானம் ஒன்றும் MY17 ரகத்தை சேர்ந்த ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிடப்பட்டிருந்த யுத்த கப்பல்கள் இரண்டின் உதவியை கோரிய வேளையில், அவை இரண்டும் இன்று மாலை செல்வதற்கு தயார் நிலையில் இருந்தன.

இதேவேளை, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இந்த நிலை தொடர்பில் இன்று பகல் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டன.

கப்பலில் இருந்து எண்ணெய் வௌியேறுமாக இருந்தால் நாட்டின் கடல் வலயம் பாரியளவில் பாதிப்பிற்குள்ளாகும் ஆபத்து காணப்படுகின்றது.

இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடியாக இலங்கை கடற்படைக்கு உதவுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்