50,177 பட்டதாரிகள் அரச சேவையில் இணைவு

by Staff Writer 02-09-2020 | 8:14 PM
Colombo (News 1st) 50,177 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நியமனங்களை வழங்குவதற்காக 25 நிமிடங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட எளிமையான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கைக்கு ஏற்ப, 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச தொழில்வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அதற்காக இன்று இணைத்துக்கொள்ளப்பட்டவர்களில் 38,760 பெண்களும் அடங்குகின்றனர். தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி பயிற்சியின் பின்னர் இவர்கள் பல்வேறு துறைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அபிவிருத்தி திட்டங்களுக்கு நேரடி பங்களிப்பை வழங்குமாறு பட்டதாரிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். இதேவேளை, அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளை பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை நாட்டின் சில பகுதிகளில் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 326 பட்டதாரிகளை, பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. மூதூர் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த பட்டதாரிகள் தமக்கான வரவுப் பதிவேட்டில் இன்று கையொப்பமிட்டனர். இதேவேளை, மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட 142 பட்டதாரிகளை பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வெலிமடை பிரதேச செயலகத்திலும் பட்டதாரிகளை பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் தெரிவாகியுள்ள 88 பட்டதாரிகள் இன்று நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.