50,000 பட்டதாரிகள் இன்று முதல் சேவையில் இணைப்பு

50,000 பட்டதாரிகள் இன்று முதல் சேவையில் இணைப்பு

by Staff Writer 02-09-2020 | 3:58 PM
Colombo (News 1st) அரச சேவையில் அபிவிருத்தி அதிகாரிகளாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகள், தமக்குரிய பிரதேச செயலகங்களுக்கு இன்று செல்லுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற்றுள்ள 50,000 பட்டதாரிகளும் இன்று முதல் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். 04 மாத காலப்பகுதியில் அவர்கள் அனைவருக்கும் தலைமைத்துவ பயிற்சி, முகாமைத்துவ பயிற்சி, அரச அலுவலக மற்றும் தனியார் நிறுவனங்களில் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் ஒரு வருட காலம் பயிற்சிக் காலமாகவே கருதப்படுமென பொது நிர்வாக , உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார். இந்த காலப்பகுதியில் பட்டதாரி ஒருவருக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதனிடையே, வேலைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டும் பெயர் இடம்பெறாத பட்டதாரிகள், தமது மேன்முறையீடுகளை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும். பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கோ அல்லது ஜனாதிபதி அலுவலகத்திலோ அவற்றை சமர்ப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீடுகளை கவனத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியாயம் பெற்றுக்கொடுக்கப்படுமென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்