மழை குறைவடைந்து அதிகரிக்கும் சாத்தியம்

மழை குறைவடைந்து அதிகரிக்கும் சாத்தியம்

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2020 | 7:03 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (03) குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் மீண்டும் மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி களுத்துறை – அகலவத்த பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு 344 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வலல்லாவிட்ட பகுதியில் 290 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், ஹங்வெல்லயில் 270 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

கடும் மழையினால் காலி வக்வெல்ல வீதி, காலி – பத்தேகம மற்றும் காலி – மாபலகம வீதி உள்ளிட்ட பல இடங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

காலி, இமதுவ, ஹபராதுவ, அக்மீமன பகுதிகளின் தாழ்நிலப் பிரதேசங்களும் விவசாயக் காணிகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
அறுவடைக்கு தயாராகவிருந்த விவசாயக் காணிகளும் அவற்றில் அடங்கும்.

எம்பிலிப்பிட்டிய, தோரகொலயாய மலபலாவ பகுதியை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அதிக மழையினால் வெயங்கொட பகுதியிலுள்ள 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக 35 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க அத்தனகல்ல இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மினுவங்கொட – அம்பகஹவத்த பிரதேசம் நீரில் மூழ்கியதால் குருநாகல் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்திற்கு தடையேற்பட்டது.

நீர்கொழும்பு கட்டுவ, புவக்வத்த தெபாஎல பகுதியில் 20 வீடுகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

கஹதுடுவ – தியகம வீதிப் பகுதியில் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சுமார் 30 வீடுகள் இன்று வௌ்ளத்தில் மூழ்கின. இங்குள்ள கால்வாயில் நீர் தேங்கியுள்ளதால், தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஹொர​ணை, பொக்குனவிட்ட, வெலகல பகுதிகளிலுள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கிக் காட்சியளிக்கின்றன.

இதேவேளை, கடும் மழையுடன் ஏற்பட்ட கடும் காற்றினால் 202 வீடுகளும், 40 கடைகளும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

திருகோணமலை, மன்னார், பதுளை, வவுனியா, ஹம்பாந்தோட்டை, புத்தளம் மாவட்டங்கள் அதிக மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

மழையுடனான வானிலையை அடுத்து 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பாதுக்க உள்ளிட்ட காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு மையம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்