நவீன யுகத்திலும் மின்சார வசதியற்ற கிராமங்கள்: மக்கள் சக்தி குழுவினரின் முல்லைத்தீவு நோக்கிய பயணம்

நவீன யுகத்திலும் மின்சார வசதியற்ற கிராமங்கள்: மக்கள் சக்தி குழுவினரின் முல்லைத்தீவு நோக்கிய பயணம்

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2020 | 7:40 pm

Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்திட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பங்குபற்றுதலுடன் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 05 ஆம் கட்டம் 25 மாவட்டங்களைத் தழுவி முன்னெடுக்கப்படுகின்றது.

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்ற மக்கள் சக்தி குழுவினர் இறை வழிபாட்டுடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான செயற்றிட்டத்தை ஆரம்பித்தனர்.

கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் சென்றிருந்தனர்.

தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே கேப்பாப்பிலவு மக்களின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.

அதனையடுத்து,மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரம்படி கிராமத்திற்கு சென்ற குழுவினர் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.

தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் பிரம்படி கிராம மக்களுக்கு நவீன யுகத்திலும் மின்சார வசதி கூட ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.

அதனையடுத்து, கேப்பாப்பிலவு கிராமத்தில் மக்கள் சக்தி மக்கள் அரண் ஸ்தாபிக்கப்பட்டது. இதன்போது தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை, மக்கள் சக்தி வீ-போர்ஸ் திட்டத்திற்கான அங்கத்தவர்களும் இதன்போது இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்திற்கு மற்றைய குழுவினர் சென்றிருந்தனர்.

பூதன்வயல் கிராமத்தில் 230 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருவதுடன், இங்குள்ள பல மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு அற்றுப்போயுள்ளது.

பாடசாலை இல்லாத பின்புலத்தில் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுநோக்கு மண்டபத்தில் ஓலைக்குடிலை அமைத்து, இங்குள்ள மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

முறிப்பு பகுதிக்கு சென்ற குழுவினருக்கு குடிநீர் பிரச்சினையால் அல்லலுறும் மக்களை சந்திக்க நேரிட்டது.

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் மற்றுமொரு குழுவினர் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராங்கொடை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

மற்றுமொரு குழுவினர் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை மற்றும் வலேகொட தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கள விஜயத்தினை மேற்கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்