கண்டியின் சில பகுதிகளில் சிறியளவில் நில அதிர்வு

கண்டியின் சில பகுதிகளில் சிறியளவில் நில அதிர்வு

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2020 | 4:20 pm

Colombo (News 1st) கண்டியின் சில பகுதிகளில் இன்றும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

கண்டி, ஹாரகம மற்றும் அநுரகம ஆகிய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

இன்று காலை 7.06-க்கு நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லேகல மத்திய நிலையத்தில் இன்றைய நில அதிர்வு தொடர்பில் பதிவாகியுள்ளது.

நில அதிர்வு தொடர்பில் 06 பேர் கொண்ட குழுவினால் தொடர்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டி – ஹாரகம பகுதியில் கடந்த 28 ஆம் திகதி இரவு 8.32 அளவில் சிறிதளவில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.

அன்றைய நில அதிர்வும், இன்றைய நில அதிர்வும் பல்லேகல மற்றும் மஹகன்தராவ நில அதிர்வு ஆய்வு மையங்களில் சிறு நில அதிர்வுகளாகப் பதிவாகியுள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் இன்று பிற்பகல் அறிவித்தது.

எனினும், முதலாவதாக ஏற்பட்ட நில அதிர்வு 3.58 ரிக்டர் என விக்டோரியா நீர்த்தேக்கத்திலுள்ள நில அதிர்வு கணிப்பீட்டு கருவியில் பதிவாகியுள்ளதென உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நில அதிர்வுகளும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரு முனைகளிலும் மிக வலுவாக உணரப்பட்டுள்ளன.

இந்த நில அதிர்வுகள் நிலப்பரப்பு எல்லைகளுக்குள் ஏற்பட்டவையல்லவென புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இன்று பிற்பகல் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நில அதிர்வு உணரப்பட்ட ஹாரகம, பல்லேகல, குருதெனிய, ரஜவெல்ல பகுதிகள் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் மேட்டு நிலத்தில் அமைந்துள்ளன.

இந்த பிரதேசங்களில் நீர்த்தேக்கத்தை அண்மித்து சுண்ணாம்புக்கல் தொழிற்சாலைகள் இருப்பதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

சுண்ணாம்புக் கற்களை உடைத்தெடுப்பதற்காக பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நில அதிர்வுகள் இரண்டு தடவைகள் உணரப்பட்டும், அவை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் பதிவான போதிலும் இங்கு இடம்பெறும் பாரிய சுண்ணாம்புக் கற்களை உடைக்கும் செயற்பாடுகளை தற்காலிகமாகவேனும் நிறுத்தி,  ஆராய வேண்டியது அவசியமல்லவா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்