ஏப்ரல் 21 தாக்குதல்: அரச அதிகாரிகள் சிலருக்கு மீண்டும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 21 தாக்குதல்: அரச அதிகாரிகள் சிலருக்கு மீண்டும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 21 தாக்குதல்: அரச அதிகாரிகள் சிலருக்கு மீண்டும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2020 | 6:17 pm

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட அரச அதிகாரிகள் சிலருக்கு உயர் நீதிமன்றத்தால் இன்று மீண்டும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்களும் இன்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முன்னாள் பொலிஸ் மா அதிபர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இந்த மனுக்களூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசுந்தர தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிவாதிகள் தற்போது சேவையில் இன்மையால், அவர்கள் சார்பில் மன்றில் ஆஜராக முடியாது என சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்சானா ஜமீர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், பிரதிவாதிகளுக்கு மீண்டும் அறிவித்தல் பிறப்பிக்க தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த போதிலும், பிரதிவாதிகள் மன்றில் ஆஜராகாமையால் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மனுதாரர்களில் ஒருவரான மோதித ஏக்கநாயக்க இன்று நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் பிரதிகளை மன்றில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு இந்த நகர்த்தல் பத்திரத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நகர்த்தல் பத்திரம் தொடர்பில் நாளை பரிசீலனையை மேற்கொள்ள உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய குழாம் இன்று தீர்மானித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்