14 குற்றவாளிகள் தொடர்பில் சிவப்பு அறிவித்தல்

வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 14 குற்றவாளிகள் தொடர்பில் சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளது

by Staff Writer 01-09-2020 | 4:53 PM
Colombo (News 1st) வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள குற்றச்செயல்களில் ஈடுபடும் 14 பேரை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சர்வதேச பொலிஸார் மூலம் சிவப்பு அறிவித்தல் பெற்றுள்ளனர். பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வௌிநாடுகளில் மறைந்திருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற செயற்பாடுகளுக்கு தேவையான 14 சந்தேகநபர்கள் குறித்து 2 மாதங்களுள் சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த 14 சந்தேகநபர்களும் கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். 14 பேரையும் விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் உறுப்பினர்களுக்கு சொந்தமான, மேல் மாகாணத்தில் உள்ள 4000 மில்லியன் ரூபாவிற்கும் அதின பெறுமதியுடைய சுமார் 900 பேர்ச்சஸ் காணியை அரசுடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபர்களுக்கு உரித்தான 12 சொகுசு கார்கள், 7 முச்சக்கர வண்டிகள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர்களின் 102 வங்கிக் கணக்குகளிலிருந்த 960 இலட்சம் ரூபா பணமும் அரசுடைமையாக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்