மக்கள் சக்தி குழுவினரின் யாழ் நோக்கிய பயணம்

by Staff Writer 01-09-2020 | 9:24 PM
Colombo (News 1st) தீர்க்கப்படாத பிரச்சினைகளுடன் போராட்ட வாழ்வியலை எதிர்நோக்கியுள்ள மக்களை நாடி உதவிக்கரம் நீட்டும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் இன்றும் நாட்டின் சில மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பங்குபற்றுதலுடன் இலங்கை மத்திய வங்கியின் உறுப்பினர்களுடன் இணைந்து மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 05 ஆம் கட்டம் 25 மாவட்டங்களைத் தழுவி இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணத்தில் 4 ஆவது நாளாக தமது பயணத்தை முன்னெடுத்த மக்கள் சக்தி குழுவினரில் ஒரு பிரிவினர் கோப்பாய் பிரிவிற்குட்பட்ட புத்தூர், கலைமதி, உடும்பிராய், செல்வபுரம் ஆகிய பகுதிகளில் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர். கோப்பாய் - கலைமதி கிராமத்தில் 300-இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு பெருமளவிலான குடும்பங்களில் போலியோ குறைபாடுகளால் தமது கல்வி மற்றும் எதிர்காலத்தை தொலைத்த பலர் வாழ்கின்றனர். புத்தூர் மேற்கு பகுதிக்கு விஜயம் செய்த மக்கள் சக்தி குழுவினர் வாழை மரத் தண்டில் இருந்து உணவுத் தட்டுக்களை உற்பத்தி செய்யும் 40 வயதான நாகமணி ரஜினிகாந்தை சந்தித்தனர். அன்னதானம் மற்றும் கோவில் நிகழ்வுகளுக்கு அதிகம் இந்த தட்டுக்கள் பயன்படுத்தப்படும் நிலையில், கொரோனாவின் பின்னர் பாரிய பாதிப்பிற்குள்ளாகியுள்ளார். ஏழு பேர் கொண்ட குடும்பத்தை நிர்வகிப்பதற்கு பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக நாகமணி ரஜினிகாந்த் தெரிவித்தார். 100 வருடம் பழமையான இந்தத் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவரின் கோரிக்கையாகும். இதேவேளை, மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் மற்றைய குழுவினர் இன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கைதடி , வள்ளுவர்புரம் மற்றும் ஊரணி ஆகிய பிரதேசங்களில் மக்கள் துயரங்களைக் கண்டறிவதற்காகப் பயணித்தனர். தையிட்டி வடக்கு பகுதிக்கு பயணித்த குழுவினர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தனர். காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் தமது அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது மக்கள் சக்தி குழுவினரிடம் மக்கள் தெரியப்படுத்தினர்.