பங்குச்சந்தை செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாகின்றன

பங்குச் சந்தை செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன

by Staff Writer 01-09-2020 | 3:57 PM
Colombo (News 1st) பங்குச் சந்தையின் அனைத்து செயற்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அறிவுறுத்தலின் பேரில் எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் திகதி முதல் பங்குச் சந்தையின் அனைத்து செயற்பாடுகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாடு நிறைவடைந்தமை தொடர்பில் அறிவிக்கும் வகையில், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேற்று பிரதமரை சந்தித்தனர். பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாடு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பிக்கப்பட்டது. COVID-19 காரணமாக 52 நாட்கள் கொழும்பு பங்குச் சந்தையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பங்குச் சந்தை செயற்பாடுகள் மூலம் புதிய தோற்றத்துடன் உலகத் தரத்திற்கு அதனை கொண்டு செல்ல முடியும் என பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் விராஜ் தயாரத்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் சிந்தக மென்டிஸ் ஆகியோர் பிரதமரை சந்தித்து தெரிவித்திருந்தனர்.