சில பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை: நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

by Staff Writer 01-09-2020 | 8:26 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் தொடரும் மழையுடனான வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியா - கணேசபுரம் பகுதியில் வீசிய காற்றினால் 34 வீடுகளும் சமயபுரத்தில் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறித்த வீடுகளின் கூரைத்தகடுகள் காற்றினால் சேதமடைந்துள்ளன. இதேவேளை, பலமான காற்று வீசியதால் வாழை, தென்னை போன்ற பயன் தரும் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. வவுனியாவில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவுகிறது. இந்நிலையில், மன்னாரில் நிலவும் சீரற்ற வானிலையால் 113 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளையிலும் சீரற்ற வானிலையால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பதுளை எல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெத்தேவெல கிராமத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்போது, 16 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.