இந்து பசுபிக் வலய விநியோகக் கட்டமைப்பை பலப்படுத்த இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஒன்றிணைந்த திட்டம்

by Staff Writer 01-09-2020 | 8:02 PM
Colombo (News 1st) அமெரிக்காவினால் தமது 24 நிறுவனங்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டமை, சர்வதேச சட்டம் மற்றும் தொடர்புகளை மீறும் நடவடிக்கை என கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.​ கொழும்பு துறைமுக நகரை அமைப்பதற்கு CCCC (China Communications Construction Company) நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனம் உள்ளிட்ட சீனாவின் 24 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவினால் அண்மையில் தடை விதிக்கப்பட்டது. தென்சீனக் கடலில் சீனா செயற்கைத் துறைமுகத்தை அமைத்தமை, இந்தத் தடை விதிக்கப்பட முக்கிய காரணமாக அமைந்தது. CCCC நிறுவனம், அதன் முக்கிய நிர்மாண ஒப்பந்த நிறுவனமாக செயற்பட்டது. இந்த நிறுவனம் உள்ளிட்ட, தடை விதிக்கப்பட்டுள்ள சீனாவின் நிறுவனங்கள் தென்சீனக் கடலில் இராணுவமயமாக்கலை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தத் தடை விதிக்கப்பட்டமையை தாம் கடுமையாக எதிர்ப்பதுடன், அது தவறான நடவடிக்கை என கொழும்பிலுள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறையாண்மையுள்ள நாடுகளின் உள்ளக விவகாரங்களில் கடுமையாகத் தலையிடும் அமெரிக்கா, அவ்வாறு தன்னிச்சையாகவும் நீதியற்ற வகையிலும் தடை விதிப்பதற்கு சர்வதேச சட்ட அடிப்படை எதுவும் இல்லை என சீனா குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாக ஆகிய நாடுகள் புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்து - பசுபிக் வலயத்தில் விநியோகத்தை தாக்குப் பிடிக்கும் வகையில் மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு மூன்று நாடுகளின் வர்த்தக அமைச்சர்களும் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனை முன்னெடுத்து, விநியோகத்தைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைக்குரிய தகவல்களை விரைவாக வழங்குமாறு அமைச்சர்கள் தமது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். ஜப்பானின் வர்த்தகத்துறை அமைச்சர் ஹிரோஷி கஜியாமா (Hiroshi Kajiyama), அவுஸ்திரேலிய வர்த்தகத்துறை அமைச்சர் சைமன் பர்மின்ஹாம் (Simon Birmingham), இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் (Piyush Goyal) ஆகியோர் காணொளி உரையாடல் மூலம் இன்று மாலை நீண்ட நேரம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.