மலையகத்தில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படாத வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடல்

by Staff Writer 29-08-2020 | 3:53 PM
Colombo (News 1st) மலையகத்தில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படாத வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. பத்தரமுல்ல இசுருபாயவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மலையக வீட்டுத்திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் தெரிவித்தார். நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் , கிராமிய இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இதன்போது, மலையகத்தில் நிர்மாணப் பணிகள் உரிய முறையில் நிறைவு செய்யப்படாத வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதமருக்கு தௌிவுபடுத்தியுள்ளார். 1,467 வீடுகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாதுள்ளதாகவும் இதன்போது பிரதமரிடம் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, குடிசைகளில் வசிப்போருக்கு இலவசமாக வழங்குவதற்காக 1400 மாடி வீட்டுக் குடியிருப்புகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர இதன்போது குறிப்பிட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன், 10 வீட்டுத் திட்டங்களின் கீழ் 3300 வீடுகளை நிர்மாணித்து குடும்பங்களுக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.