by Staff Writer 29-08-2020 | 7:30 PM
Colombo (News 1st) கடந்த சில நாட்களாக சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள சிங்கராஜ வனாந்தர எல்லையின் நெலுவ லங்காகம வீதி தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று அங்கு சென்றிருந்தார்.
வீதி அபிவிருத்தியின் போது சிங்கராஜ வனத்திற்கோ சூழலுக்கோ பாதிப்பு ஏற்படக்கூடாது என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கராஜ வனம் அல்லது வீதி அபிவிருத்தி இடம்பெறும் கிராமிய பகுதியின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாத்து, மக்களுக்கு மிகவும் முக்கியத்துவமான வீதியை நிர்மாணிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நிர்மாணப் பணிகளை 90 நாட்களுக்குள் நிறைவு செய்யுமாறு இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தேயிலைத்துறையை பிரதான ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்ட லங்காகம மக்கள், இந்த வீதி புனரமைக்கப்பட்டதன் பின்னர் 45 நிமிடங்களில் தெனியாயவைச் சென்றடைய முடியும்.
வீதி புனரமைக்கப்பட்ட பின்னர் நெலுவயிலிருந்து தெனியாய வரை பஸ் சேவையை நாளாந்தம் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, லங்காகம கிராமத்தில் உள்ள சங்கிலிப் பாலத்திற்கு பதிலாக புதிய பாலமொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
120 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட பாலம் ஒன்றும் இதனுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்படுவதுடன், வத்துகல, லங்காகம, நில்வெல்ல, கொலன்தொட்டுவ மற்றும் பிட்டதெனிய கிராமங்களில் உள்ள மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் இதுவரை நிலவிய தடை இதன் மூலம் நீக்கப்படவுள்ளது.
சுமார் 700 குடும்பங்கள் வசிக்கும் லங்காகமயில் அனைத்து குடும்பங்களுக்கும் 03 மரக்கன்றுகள் வீதம் இலவசமாக வழங்கி 2100 மரக்கன்றுகளை நாட்டி பிரதேச மக்களினாலேயே வனப்பூங்காவினை பராமறிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
2016ஆம் ஆண்டு மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் போது லங்காகம மக்களின் பிரச்சினை வௌிக்கொணரப்பட்டது.
நெலுவ, லங்காகம வீதி எட்டு வருடங்களாக புனரமைக்கப்படாமையால், மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தயாரித்த 2016ஆம் ஆண்டிற்கான மக்கள் சக்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதிச் சந்தை இடம்பெறும் சனிக்கிழமைகளில் மாத்திரம் பொதுப்போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாகவும், ஏனைய நாட்களில் மக்கள் போக்குவரத்துப் பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் மக்கள் சக்தியின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.