ஈரவலயத்தை துப்புரவு செய்தவருக்கு விளக்கமறியல்

ஆனைவிழுந்தான் ரம்சார் ஈரவலயத்தை சட்டவிரோதமாக துப்புரவு செய்தவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 29-08-2020 | 3:23 PM
Colombo (News 1st) புத்தளம் - ஆனைவிழுந்தான் ரம்சார் (Ramsar) ஈரவலய புகலிட நிலத்தை சட்டவிரோதமாக துப்புரவு செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இறால் வர்த்தகரான உடப்பு பகுதியை சேர்ந்த 35 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர் இன்று காலை ஆஜராகியதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சேதமாக்கப்பட்டுள்ள ஆனைவிழுந்தான் ரம்சார் ஈரவலயத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசேட குழுவினூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார். தமது உத்தியோகஸ்தர்கள் இல்லாதிருந்த போது, கடந்த 25 ஆம் திகதி இரவு இயந்திரங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களைப் பயன்படுத்தி ஆனைவிழுந்தான் ரம்சார் ஈரவலய நிலம் துப்பரவு செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார். சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு துப்பரவு செய்யப்பட்டுள்ளது. ஆயுர்வேத மூலிகைகளை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த நிலப்பரப்பே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்