மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

by Staff Writer 28-08-2020 | 9:04 PM
Colombo (News 1st) 'மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்' செயற்றிட்டம் நாளை (29) முதல் மீண்டும் மக்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ளது. ஐந்தாவது தடவையாகவும் பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இல்லங்கள் தோறும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இல்லங்கள்தோறும் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெறப்பட்டது. மக்கள் சக்தி குழுவின் தலைவர்கள், பேராதனை பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் உபுல் பீ. திசாநாயக்க, பேராசிரியர் திலக் பண்டார உள்ளிட்டோர், மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தனர். பின்னர், மக்கள் சக்தி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரிடம் ஆசி பெற்றனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டம் 2016 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் முப்பதாயிரத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு சென்று மக்களின் துயரை அறிந்து, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நான்கு ஆய்வறிக்கைகள் இதுவரை வௌியிட்டப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டில் வௌியான முதலாவது அறிக்கையிலிருந்து பின்னரான அறிக்கைகளிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளாக, குடிநீர், காட்டு யானை பிரச்சினை ஆகியன அடையாளங்காணப்பட்டுள்ளன. மக்களின் பிரச்சினைகளை உள்ளடக்கிய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் சக்தி சமூக நலத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கான முக்கிய தரவுகள் இல்லங்கள் தோறும் திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படுகின்றன.