யானை - மனித மோதல், சதுப்பு நில பயன்பாடு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

by Staff Writer 27-08-2020 | 7:35 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (27) நடைபெற்ற கலந்துரையாடலில் சதுப்பு நிலங்களில் பயிரிடும் போது மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் சட்டங்களை இலகுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சதுப்பு நிலங்களுக்கு அருகில் இறால் வளர்ப்பிற்கான சாதகத்தன்மை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வனஜீவராசிகளின் பாதுகாப்பு, யானை வேலி, அகழிகளை அமைத்தல், மீண்டும் பயிரிடல் மற்றும் வனவள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, யானைகள் வாழும் பிரதேசங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ சரணாலயங்களிலுள்ள குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை புனரமைப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆறுகளுக்கு அருகில் மணல் அகழ்வைக் கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்வதற்கு அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.