இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று 

by Staff Writer 27-08-2020 | 7:12 AM
Colombo (News 1st) வருடத்தின் இறுதி காலாண்டுக்கான அரச செலவீனத்தை ஈடுசெய்யும் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. செப்டெம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான 4 மாத காலத்திற்கான அரச செலவீனங்களை ஈடு செய்யும் 1,746 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை மீது இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க அமைச்சரவை நேற்று (26) அங்கீகாரம் வழங்கியது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் விவாதம் மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. நாளைய தினம் விவாத நிறைவில் இடைக்கால கணக்கறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் எஞ்சிய 4 மாதங்களுக்கான செலவீனங்களுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் கடந்த வெள்ளிக்கிழமை, இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின் பிரகாரம் கடந்த 5 மாதங்களுக்கான அரச செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொதுத் தேர்தல் முடிவடைந்துள்ள பின்புலத்தில் வரவு செலவு திட்டமொன்று இவ்வாண்டு கொண்டுவர முடியாதுள்ளதால் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அடுத்த 4 மாத காலத்துக்கான அரச செலவினங்களை மேற்கொள்ளவுள்ளது. இதேவேளை, மறு அறிவித்தல் வரை பாராளுமன்ற பார்வையாளர் பகுதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. COVID - 19 தொற்றை கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பாராளுமன்ற பார்வையாளர் பகுதி மீள திறக்கப்படும் தினம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுமென பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.