by Staff Writer 27-08-2020 | 9:33 PM
Colombo (News 1st) வருடம் முழுவதும் அல்லது வருடத்தின் பல மாதங்கள் நீரில் மூழ்கியுள்ள, நீரால் போஷிக்கப்பட்ட சதுப்பு நிலமாகக் காணப்படும் நன்னீர், கடல் நீர் அல்லது உப்பு நீர் சூழ்ந்துள்ள பகுதிகள் ஈரவலயமாக அடையாளப்படுத்தப்படுகிறது.
1971 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி ஈரானின் RAMSAR நகரில் நடைபெற்ற மாநாட்டில் இது தொடர்பில் உலகின் கவனம் திரும்பியதுடன், இதன்போது 21 இனத்தவர்கள் இவ்வாறான பெறுமதி வாய்ந்த ஈரவலய கட்டமைப்பை பாதுகாப்பதற்காக ரமிசா உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.
ஆனைவிழுந்தான் வாவி கட்டமைப்பு RAMSAR உடன்படிக்கைக்கு அமைவாக அறிவிக்கப்பட்ட ஈரவலயமாகும்.
புந்தல தேசிய சரணாலயம், மாதுகங்கை சுற்றாடல் கட்டமைப்பு, குடும்பிகல, குமண தேசிய சரணாலயம், வண்ணக்கலை ஈரநிலம், வில்பத்து தேசிய சரணாலயம் ஆகியன ஏனைய RAMSAR ஈரவலயங்களாகும்.
இலங்கையில் அழிவை எதிர்நோக்கிய தேசிய ரீதியான அரியவகை உயிரினங்கள் பலவும், விசேட பறவை இனங்களையும் இந்த சுற்றாடலில் காண முடியும்.
நீர்காகம், கருவெல் கொக்கு உட்பட பல வகையான கொக்கு இனங்களும், அரிய ஊர்வனங்களும் நிலத்திலும் நீரிலும் இங்கு வாழ்கின்றன.
சிறப்பியல்புகள் பல பொதிந்துள்ள இந்த ஆனைவிழுந்தான் RAMSAR ஈரவலயத்தின் சுற்றாடலைப் பாதிக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் சிலரும் இருக்கவே செய்கின்றனர்.
வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழுள்ள இந்த ஈரவலய பூமியின் முதுபந்தி பிரதேசத்தில் ஒரு ஏக்கர் நிலம் டோசர் செய்யப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆனைவிழுந்தான் ஈர நிலத்திற்கு பொறுப்பாக செயற்படும் வன பாதுகாப்பு திணைக்களத்தினரேனும் அறியாதுள்ளமை விந்தைக்குரியதே.
நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறித்த இடத்திற்கு சென்றிருந்த போது, இலங்கை நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் பிரதேச அதிகாரி ஒருவர் அங்கு வருகை தந்திருந்தார்.
ஈரநிலத்தை அண்மித்துள்ள நெல் வயற்காணிகளிலும் நீர் நிலைகளிலும் உப்பு கலப்பதன் காரணமாக, இங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த இறால் வளர்ப்பு இதற்கு முன்னர் நிறுத்தப்பட்டது.
புத்தளத்தின் பிரபல அரசியல்வாதி ஒருவர் இந்த ஈரநிலத்தை அழிக்கும் செயற்பாடுகளின் பின்புலத்தில் இருப்பதாக பிரதேசவாசிகள் கூறினர்.