சபாநாயகர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

அனுமதியின்றி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கோப் குழு தலைவரை அழைக்க முடியாது - சபாநாயகர் 

by Staff Writer 27-08-2020 | 1:08 PM
Colombo (News 1st) தமது அனுமதியின்றி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு கோப் குழுவின் தலைவரை அல்லது உறுப்பினர்களை அழைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தான தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தின் விசேட அனுமதியின்றி, கோப் குழுவில் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எவரையும் அழைக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி அழைக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பிலும் இதன்போது அவர் கேள்வியெழுப்பினார். அவ்வாறான அறிவித்தல் ஏதும் இதுவரை வௌியடப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து சுனில் ஹந்துன்நெத்தி சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள விடயம் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கு எழுத்துமூலம் பதிலளிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது கூறியுள்ளார்.