விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்கினால் பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறையிடுவோம்: சிவாஜிலிங்கம்

by Bella Dalima 25-08-2020 | 7:50 PM
Colombo (News 1st) முன்னாள் வட மாகாண முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டிலிருந்து (Hansard) நீக்கினால் பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறையிடுவதாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். தமிழ் உலகின் செம்மொழிகளில் ஒன்று என பல உலக நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் அது மூத்த குடிமக்களின் மொழி என்று சொன்னதை பாராளுமன்ற பதிவேடு ஹன்சார்டிலிருந்து நீக்க வேண்டும் என்று சிலர் கூக்குரலிட்டதும், அதனை பரிசிலீப்பதாக சபாநாயகர் சொன்னதும் மிகவும் கீழ்த்தரமான ஜனநாயக நடைமுறைக்கு விரோதமான செயல் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அவ்வாறு சி.வி.விக்னேஸ்வரனின் உரை ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்டால், சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடமும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் முறையிடுவதாக சிவாஜிலிங்கம் கூறினார்.
எதற்காக தமிழ் மக்கள் எங்களுடை தேசியக் கூட்டணிக்கு வாக்களித்தார்களோ அந்த விருப்பத்தை அங்கே அவர் தெரிவித்திருக்கிறார். ஆகவே, எந்த பிரச்சினை என்றாலும் பாராளுமன்றத்திலிருந்து பதவி பறிக்கப்பட்டாலும் நீக்கப்பட்டாலும் என்ன நெருக்கடி வந்தாலும் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி இந்த விடயத்தில் உறுதியாக இருக்கும். போர்க்குற்றம் இனப்படுகொலைகளுக்கான சர்வதேச நீதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்
என அவர் மேலும் கூறினார்.