மகாராஷ்ட்ராவில் 5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது

மகாராஷ்ட்ராவில் ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இருவர் பலி

by Bella Dalima 25-08-2020 | 4:27 PM
Colombo (News 1st) இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 60 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் சுமார் இருநூறு பேர் சிக்கியிருக்கலாமென அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பையிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Raigad மாவட்டத்தின் மஹத் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி நேற்று மாலை இடிந்து வீழ்ந்துள்ளது. 05 மாடிகளைக் கொண்ட குறித்த குடியிருப்பு தொகுதியில் 47 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த கட்டடம் சுமார் 10 வருடங்கள் பழைமையானதெனவும் கட்டடத்தின் அத்திவாரம் முறையாக இடப்பட்டிருக்கவில்லையெனவும் மஹத் நகரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனிக் மொட்ராம் கூறியுள்ளார். 2017ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவில் 1161 கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், 1,200 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.