.webp)
Colombo (News 1st)
குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு குருநாகல் நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 7 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மனுதாரர்களின் 5 மனுக்களையும் பரிசீலனை செய்து இறுதி தீர்மானம் வழங்கப்படும் வரை, இந்தத் தடை அமுலிலிருக்கும் என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் A.H.M.D. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. குருநாகல் மாநகர மேயர் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரதிவாதிகளான, குருநாகல் நீதவான் உள்ளிட்ட தரப்பினரை எதிர்வரும் 15 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு வலியுறுத்தியும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குருநாகலில் புராதன பெறுமதி வாய்ந்த கட்டடம் தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கு தமது உத்தரவானது தடையில்லை எனவும் மனுதாரர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள நீதிபதிகள் குழாம், சந்தேக நபர்கள் இன்று (25) அல்லது நாளை (26) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் சந்தேக நபர்களை கைது செய்யவோ, விளக்கமறியலில் வைக்கவோ கூடாது என நீதிபதிகள் குழாம் பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு தொடர்பில் ஆட்சேபனை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாக, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதவ தென்னகோன் மன்றுக்கு அறிவித்த நிலையில், அடுத்த விசாரணையின் போது ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.