ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு: ஆட்சேபனை மனு சமர்ப்பிக்க பிரதிவாதிகளுக்கு அனுமதி

ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு: ஆட்சேபனை மனு சமர்ப்பிக்க பிரதிவாதிகளுக்கு அனுமதி

ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு: ஆட்சேபனை மனு சமர்ப்பிக்க பிரதிவாதிகளுக்கு அனுமதி

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2020 | 6:51 pm

Colombo (News 1st) முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் 7 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை அமுல்படுத்தப்படுவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக அடுத்த மாதம் 4 ஆம் திகதி ஆட்சேபனை மனு சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மனுதாரர்கள் ஏழு பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த ஏ.எம்.டீ. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மத்திய வங்கி முறிகள் ஏலத்தின் போது 51.98 மில்லியன் நிதியை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விடயங்களை முன்வைத்த சந்தர்ப்பத்தில், கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவினால் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழுபேர் முன்வைத்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை தடுத்து இடைக்கால தடையுத்தரவு விதித்தது.

சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் அதன் பணிப்பாளர், முன்னாள் நீதவான் உள்ளிட்டோர் இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்