இந்திய உயர்ஸ்தானிகருடன் ஜீ.எல்.பீரிஸ் கலந்துரையாடல்

இந்திய உயர்ஸ்தானிகருடன் ஜீ.எல்.பீரிஸ் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2020 | 8:38 pm

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இந்திய தூதுவருக்கும் இடையிலான கலந்துரையாடல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நேற்றைய ஊடக சந்திப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விமர்சன ரீதியில் கருத்துத் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசுவதற்கு முன்னர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமுள்ள அரசாங்கத்துடன் கலந்துரையாடியிருக்க வேண்டும் என அந்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் கல்வி, தொழிற்பயிற்சித் துறைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தே கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தொழில்நுட்பம், தொழில், கல்வி மற்றும் பயிற்சித் துறையில் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவித்தல் உள்ளிட்ட கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியாவினால் ஒத்துழைப்பு வழங்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, கல்வி அமைச்சின் செயலாளர் கே.கே.சீ.கே. பெரேரா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் உள்ளிட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தற்போது இந்தியா உதவி வருவதாகவும், நாட்டின் கல்வித்துறையில் முக்கியத்துவமளிக்கப்பட வேண்டிய விடயங்களைச் சுட்டிக்காட்டினால் எதிர்காலத்தில் அதற்காக ஒத்துழைப்பு வழங்க முடியும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் இடதுசாரி அமைப்பின் ஏற்பாட்டாளர் சமீர பெரேரா பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடத்தினர், ஜீ.எல்.பீரிஸ் கடுமையாக விமர்சித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு கலந்துரையாடுவது தவறு என்றும், மாகாண சபை குறித்து இந்தியாவுடன் அன்றி, முதலில் தம்முடன் கலந்துரையாட வேண்டும் என்றும் கூறுகின்றார். இந்தியாவுடன், இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடுவது தவறு என கூறுகின்றார். இவ்வாறு கூறிய ஜீ.எல்.பீரிஸ் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடுகின்றார். கல்வி குறித்தே பேசியதாகக் கூறுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸூம் கலந்துரையாடியது. மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் பேசியதாக அவர்கள் கூறினர். நாம் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்து தீர்மானிப்பது வௌிநாடுகளா? இது பாரிய பிரச்சினை. இது சுயாதீன நாடு. இவ்வாறு சென்றே கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றன. இந்தத் தலையீட்டினால் நாடுகளின் வளங்கள், நாடுகளின் முக்கிய இடங்களை விற்பது தொடர்பிலான பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்